சென்னை
மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பை-பாஸ் பகுதியில் மேலும் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
|மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பை-பாஸ் பகுதியில் மேலும் 3 மாதங்களுக்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்காக தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் 11-02-2023 வரை 3 மாதத்துக்கு பகல் மற்றும் இரவு முழுவதும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களில் பூந்தமல்லிக்கு முன்பாக, சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடது புறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கமாக சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன. அவ்வாறான வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல் மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தாண்டிச் சென்று இரண்டு வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாக செல்ல வேண்டும்.
சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூர் பக்கம் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்கின்றன.
அந்த வாகனங்கள் பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் சென்னை வெளிவட்ட சாலை பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பாமல் சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப்பஞ்சேரி சுங்கச் சாவடிக்கு முன்பு வலது புறம் "யூ" வடிவில் திரும்பி சென்னை வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி பை-பாஸ் பகுதி வரை வந்து பின்னர் பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையை அடைந்து தாங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.
பொதுமக்கள் மேற்படி பணியை விரைவில் முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.