நீலகிரி
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
|பாலத்தின் அடிப்பாகம் இடிந்து விழுந்ததால் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடுவழியில் அவதி அடைந்தனர்.
கூடலூர்
பாலத்தின் அடிப்பாகம் இடிந்து விழுந்ததால் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடுவழியில் அவதி அடைந்தனர்.
பாலத்தின் அடிப்பாகம் இடிந்தது
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கர்நாடகா, கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கூடலூர்-ஊட்டி சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மேல் கூடலூர் புனித மேரிஸ் ஆலயம் எதிரே உள்ள தரைப்பாலத்தையொட்டி சாலை விரிவாக்க பணிக்காக கடந்த சில வாரங்களாக பொக்லைன் எந்திரம் மூலம் மண் தோண்டும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு தரைப்பால அடிப்பாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தொடர்ந்து வாகனங்கள் சென்ற போது அடிப்பாகம் மேலும் சேதமடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
அப்போது பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் ராகுல்காந்தி பாதுகாப்பு பணிக்கு சென்ற நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அந்த வழியாக வந்தார். அவர் பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து, போக்குவரத்தை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டார். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தமிழக-கர்நாடகா பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடுவழியில் அவதி அடைந்தனர்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் பாலத்தின் மேற்புறம் மாற்று சாலை அமைத்து வாகன போக்குவரத்தை தொடங்க முடிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டது. இரவு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மாற்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்று சாலை
இதுகுறித்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கூறும்போது, இடிந்த பாலத்தின் அருகே மாற்று சாலை அமைக்கும் வரை கூடலூரில் இருந்து மசினகுடி, கல்லட்டி, தலைகுந்தா மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு உள்ளூர் வாகனங்களை மட்டும் காலை 6 மணி முதல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு முழுவதும் விடிய, விடிய பணி நடைபெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்குள் மாற்று சாலை அமைக்கப்படும். அதன் பின்னர் கூடலூர்-ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கும் என்றார். முன்னதாக ராகுல்காந்தி எம்.பி. நேற்று மாலை 3.30 மணிக்கு அந்த பாலம் வழியாக காரில் கடந்து வயநாடு சென்றது குறிப்பிடத்தக்கது.