< Back
மாநில செய்திகள்
மலை கிராமங்களில் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மலை கிராமங்களில் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி
|
3 Oct 2023 12:16 AM IST

குமரி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளப்பெருக்கால் மலை கிராமங்களில் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளப்பெருக்கால் மலை கிராமங்களில் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கீரிப்பாறையில் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

தொடர்மழை

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்தது.

இதனால் அந்த பகுதிகளில் பழங்குடி மற்றும் ரப்பர் கழக குடியிருப்புகளுக்குச் செல்லும் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன்காரணமாக கடந்த 2 நாட்களாக 10 மலை கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளம் தணிந்தது

இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து குலசேகரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட மலையோர பகுதிகளில் மழையின் தீவிரம் தணிந்து காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.

இதனால் காட்டாறுகளில் பாய்ந்த வெள்ளம் சற்று தணிந்ததை தொடர்ந்து தரைப்பாலங்களை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தின் அளவும் குறைந்து காணப்பட்டது. இதனால் மோதிரமலை-குற்றியாறு இடையில் உள்ள தரைப்பாலத்தில் ரப்பர் காலனி மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லத் தொடங்கினர்.

திற்பரப்பு அருவி

மேலும், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து குலசேகரத்தில் இருந்து குற்றியாறு, கிளவியாறு ஆகிய மலை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் மற்ற மலை கிராமங் களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது

கன மழையினால் திற்பரப்பு அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. நேற்று மழை குறைந்ததால் மாலையில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால், திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியின் ஒரு பகுதியில் பாதுகாப்பாக குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சப்-கலெக்டர் ஆய்வு

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து தடுப்பணை மீது வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று குழித்துறை தாமிரபரணி ஆற்று பகுதிகளை பத்மநாதபுரம் சப்-கலெக்டர் கவுசிக், விளவங்கோடு தாலுகா தாசில்தார் குமாரவேல் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தரைப்பாலம் சேதம்

கீரிப்பாறை அருகே லேபர் காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிக்கு செல்வதற்காக கீரிப்பாறையில் இருந்து ஒரு மண் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், லேபர் காலனிக்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்தது. அதைத்ெதாடர்ந்து தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்