தேனி
சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து துண்டிப்பு
|ஆண்டிப்பட்டி அருகே சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாலையில் தேங்கிய தண்ணீர்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று பெய்த கனமழையால், அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு குளம் போல் தண்ணீர் தேங்கியது.
போதிய வடிகால் வசதி இல்லாததால் அங்கு 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நாச்சியார்புரத்துக்கு வருகிற வாகனங்கள் வேறு வழியாக சென்று வருகின்றன. சில வாகனங்கள், தேங்கி கிடக்கும் தண்ணீரில் ஊர்ந்து செல்கின்றன.
குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதேபோல் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் அடிக்கடி தண்ணீருக்குள் தவறி விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது அந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே சாலையில் தண்ணீர் தேங்காத அளவுக்கு வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
பள்ளிக்குள் புகுந்த மழைநீர்
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பள்ளி வளாகம் குளம் போல் காட்சி அளிக்கிறது. ஒரு அடி உயரம் வரை வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கியது. இதன் எதிரொலியாக அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மோட்டார் மூலம் பள்ளியில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய ஆணையாளர் பாலகிருஷ்ணன், ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தண்ணீரை வெளியேற்ற காலதாமதம் ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.