< Back
மாநில செய்திகள்
மினி டிரான்ஸ்பார்மரால் போக்குவரத்து நெருக்கடி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மினி டிரான்ஸ்பார்மரால் போக்குவரத்து நெருக்கடி

தினத்தந்தி
|
14 Jun 2022 5:06 PM GMT

மினி டிரான்ஸ்பார்மரால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நகரின் முக்கிய பகுதியான அரண்மனை அருகில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மினி டிரான்ஸ்பார்மரால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

ராமநாதபுரம் நகரில் மழைநீர் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலை பகுதிகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக சிறிய தெருக்களில் அதிக வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் சாலைத்தெரு, பெரியபஜார் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து போலீசார் இந்த சாலை பகுதிகளில் காலை முதல் இரவு வரை இடைவிடாத பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுகிய சாலை வழியாக ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரண்மனை பகுதியில் இருந்து மத்திய கொடிக்கம்பம் பகுதிக்கு வரும் வழியில் சாலையின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு ஒருபுறம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுதவிர, மின்வாரியத்தின் சார்பில் கோட்டைவாசல் விநாயகர் கோவில் அருகில் சாலையின் நடுவில் மின்வாரியத்தின் சார்பில் மினி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் எவ்வாறு திட்டமிடாமல் இதுபோன்று டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர் என்பது புதிராக உள்ளது. தற்போதைய போக்குவரத்து நெருக்கடியின்போது இந்த டிரான்ஸ்பார்மர் பெரும் இடையூறாக உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் வாகனங்களை நிறுத்துவது தற்காலிக கடைகள் அமைப்பது என இன்னும் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது.

இதனால் அந்த வழியாக காலை முதல் மாலை வரை எந்த வாகனமும் அரைமணி நேரத்திற்கு மேலாக நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண சாலை வழியாகவே இவ்வாறு செல்ல வேண்டியதை நினைத்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த மினி டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்