< Back
மாநில செய்திகள்
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
7 July 2022 4:23 PM GMT

பழனி கடைவீதியில், சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பழனி வேல் ரவுண்டானாவில் இருந்து காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி செல்லும் சாலையில் காய்கறி, மளிகை, தங்க கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்க மக்கள் அதிகமாக வருவதால் எப்போதும் கூட்டமாக இருக்கும். குறிப்பாக கடைவீதிக்கு இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், தங்களது வாகனங்களை கடைகளின் அருகிலேயே சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் சாலையோர கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் கடைவீதி சாலையில் வாகனங்கள் எப்போதும் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.

இதேபோல் கடைவீதிக்கு பகல் நேரத்திலேயே சரக்கு லாரிகள், வேன்கள் வருகின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் முன்பு பொருட்களை இறக்கி வைப்பதற்காக நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் மார்க்கெட், கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பழனி மார்க்கெட் சாலையில், பகல் நேரங்களில் லாரிகள் செல்வதை தடுக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். இதற்கான முயற்சியில், போக்குவரத்து போலீசார் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்