< Back
மாநில செய்திகள்
வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்
கரூர்
மாநில செய்திகள்

வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
28 Sep 2022 6:58 PM GMT

வெங்கமேடு மேம்பாலத்தின் அருகே வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பணியை விரைந்து முடிக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்கமேடு மேம்பாலம்

கரூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வெங்கமேடு, மண்மங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு மேம்பாலம் வழியாகத்தான் செல்கின்றன. எனவே கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்தப்பாலம் ஒரு முக்கியமான பாலமாகும். வெங்கமேடு மேம்பாலத்தின் நுழைவு வாயிலுக்கு இடதுபுறத்தில் ரெயில்வே நிலையம், ஐந்து ரோடு, புலியூர், வாங்கல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

கரூரில், வெங்கமேடு மேம்பாலம் சந்திப்பு பகுதியின் ஒரு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்தான் வடிகால் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேற்படி வடிகால் கட்டும் பணிகளால் பொதுமக்களும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த துயரமடைந்தனர். இதனால் அந்தப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அந்தப்பகுதியே திக்குமுக்காடியது.மேலும் அந்தப்பணிகள் முடிக்க அதிக நாட்கள் ஆனதால் தினந்தோறும் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் அவதியுற்றனர். ஆமை வேகத்தில் நடைபெற்ற மேற்படி வடிகால் அமைக்கும் பணிகள் ஒரு வழியாக கடந்த மாத இறுதியில்தான் முடிவடைந்தன. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.

புதிதாக வடிகால் அமைக்கும் பணி

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், வெங்கமேடு மேம்பாலத்தின் அதே சந்திப்புப் பகுதியின் எதிரே உள்ள இடத்தில் வடிகால் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடிகால் அமைக்கும் பணியின் காரணமாக மீண்டும் தினந்தோறும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் வந்து செல்லும் வாகனங்கள் சற்று நேரம் காத்திருந்த பின்புதான் செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பெரிய பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.சில சமயங்களில் இந்தப்பகுதியில் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்தும் விடுகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தப்பகுதிகளில் போக்குவரத்து சீர்படவும், விபத்துகள் ஏற்படாத வண்ணம் தவிர்க்கவும், வெங்கமேடு மேம்பாலத்தின் மேற்படி சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் புதிதாக வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக முடித்து தோண்டிய பள்ளத்தை விரைவில் மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்