< Back
மாநில செய்திகள்
அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டிஅணிவகுத்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டிஅணிவகுத்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
24 Dec 2022 6:45 PM GMT

அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி அணிவகுத்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்து நேற்றில் இருந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதாலும் சென்னை போன்ற வெளியூர்களில் தங்கியிருந்து பணியாற்றி வருபவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மாலை வரை அதிகளவில் சென்றன. இவ்வாறு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு முதல் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சீரான வேகத்தில் மெதுவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.

விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து முத்தாம்பாளையம் சந்திப்பு வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று அதிகாலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பிலேயே வாகனங்களை திருப்பி, விழுப்புரம் நகர்பகுதி வழியாக வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். நேற்று அதிகாலை 4 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மாற்று சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து, பகல் 1 மணி வரை இந்த வாகன நெரிசல் இருந்தது. ஜானகிபுரத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் வேறு மாற்றுப்பாதையின்றி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்