அரியலூர்
சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
|சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய தொடங்கியது. தா.பழூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விட்டுவிட்டு தூறல் மற்றும் லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் திடீரென நேற்று இரவு பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று இரவு மழை பெய்தபோது ஏற்பட்ட திடீர் காற்றின் காரணமாக மதனத்தூர் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள புளிய மரம் சாய்ந்து மின் கம்பிகள் மற்றும் சாலையில் விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் மார்க்கத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் விரைவாக செயல்பட்டு புளியமரத்தை அகற்றினர். இதனால் சிறிது நேரத்தில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.