காஞ்சிபுரம்
பாலாறு பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிப்பு
|பாலாறு பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் பாலாறு மேம்பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இதனை கடந்து தான் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் இந்த மேம்பாலத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் சென்று வருவதால் மேம்பாலத்தில் சாலை சேதம் அடைந்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
மேம்பாலத்தின் கட்டுமான கம்பிகள் வெளியே தெரிந்து அதனால் விபத்துகளும் ஏற்பட்ட நிலையில் இதன் மேல் தார்சாலை அமைக்க கடந்த ஆண்டு் ஆய்வு செய்யப்பட்டு அதன் பேரில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் பொதுமக்களும் புகார் அளித்த நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் பாலாறு மேம்பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கினர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல் காஞ்சீபுரம் உத்திரமேரூர் கீழ் ரோடு பகுதியில் உள்ள பாலாற்று பாலத்திலும் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.