< Back
மாநில செய்திகள்
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி
மாநில செய்திகள்

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
18 Oct 2023 2:30 AM IST

பந்தலூரில் பலத்த மழையால் தமிழக-கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பந்தலூரில் பலத்த மழையால் தமிழக-கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

கேரள மாநிலத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அம்மாநிலத்தையொட்டி உள்ள நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பந்தலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா, சேரங்கோடு, சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பொன்னானி, சோலாடி ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சில இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள், மரக்கிளைகள் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் பந்தலூர்-வயநாடு சுல்தான்பத்தேரி சாலையில் உள்ள சேரங்கோடு சோதனைச்சாவடி அருகே காபிகாடு பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் தமிழக-கேரள மாநிலம் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மரம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. தொடர் மழையால் பந்தலூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்