சிவகங்கை
கீழடியில் பாரம்பரிய விதை திருவிழா விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது
|கீழடியில் பாரம்பரிய விதை திருவிழா விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது.
திருப்புவனம்
கீழடியில் பாரம்பரிய விதை திருவிழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது.
விதை திருவிழா
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி பசியாபுரம் பகுதி. இங்கு உள்ள தனியார் திருமண மகாலில் பாண்டிய மண்டல வேளாண்மை பேரமைப்பு சார்பில் வைகை உழவர் பிரிவு, பசுமை பூமி இணைந்து நடத்தும் 3-ம் ஆண்டு விதை திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகரசேதுபதி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், வேளாண்மை ஆசிரியர் பாமயன், மக்கள் மருத்துவர் புண்ணியமூர்த்தி, இயற்கை வழி உழவர் மருதம்குமார், கரிசல் காட்டு விவசாயி குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டு விவசாய நடைமுறைகள் குறித்து பேசினார்கள். முன்னதாக சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. விழா மலரை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பெற்றுக்கொண்டார்.
நெல் விதைகள்
இந்த விதை திருவிழாவில் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி, பனை ஓலையால் செய்யப்பட்ட நகைகள், சித்த வைத்தியசாலை, மைக்ரோ புட்ஸ், நாட்டு காய்கறி விதைகள், பசுமை இயற்கை விவசாய பொருட்கள், மூலிகை குளியல் சோப், மரபு விதைகள் மற்றும் விவசாய கருவிகள் உள்பட பல்வேறு வகை கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். விதை திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.
பின்பு 22 ரக பாரம்பரிய நெல் விதைகளை அடுத்த ஆண்டு இரண்டு மடங்காக தர வேண்டும் என்ற முறையில் இலவசமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு இளம் இந்தியா அமைப்பு சார்பில் ஆயிரம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பாரம்பரிய விதை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.