கடலூர்
பாரம்பரிய விதை திருவிழா கண்காட்சி
|விருத்தாசலத்தில் பாரம்பரிய விதை திருவிழா கண்காட்சி
விருத்தாசலம்
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விதை திருவிழா நேற்று நடைபெற்றது. பாரம்பரியமான இயற்கை வேளாண்மை குறித்தும், தமிழர்களின் தொன்மையான சாகுபடி முறைகளையும் மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இத்திருவிழாவில் மரபு வகையை சேர்ந்த நெல் விதைகள், நாட்டு ரக செடி வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கையான உணவு வகைகள், தின்பண்டங்கள், மூலிகை மருந்துகள், வாழ்வியலுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய சித்த மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பாரம்பரியம் மற்றும் இயற்கை சார்ந்த வகையில் தயாரிக்கப்பட்ட விதைகள், உணவு பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக தேவார பாடல் இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பறை இசை, சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவுக்கு முன்னோடி பாரம்பரிய விவசாயி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செந்தமிழ்காடு இயற்கை வேளாண்மை இயக்க அமைப்பாளர் ரமேஷ் கருப்பையா, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் அமைப்பாளர் முருகன்குடி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், துணை பேராசிரியர் பாரதிக்குமார், மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா ஆகியோர் இயற்கை விவசாயம், அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்கள். இந்த விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் மரபு வழி விவசாயத்தை மேற்கொள்வது மற்றும் மேம்படுத்துவது குறித்து கருத்துரை வழங்கினார்கள். முடிவில் இயற்கை விவசாயி எருமனூர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.