பெரம்பலூர்
உழவர் சந்தையில் தொன்மைசார் உணவகம்
|உழவர் சந்தையில் தொன்மைசார் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுதானிய ஆண்டாக நடப்பு ஆண்டை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்த நிலையில், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மக்களிடையே சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்துகள் நிறைந்த நமது பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் சிறுதானிய உணவு பொருட்களை மீண்டும் மக்களிடையே பழக்கப்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் கற்பகம் அறிவுரையின்பேரில், வேளாண்மை வளர்ச்சி துணை இயக்குனர் கண்ணன் மேற்பார்வையில் பெரம்பலூர் உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் சிற்றுண்டி உணவகம், இலக்கியம் தொன்மை சார் உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஊட்டச்சத்து நிறைந்த வரகு பொங்கல், சாமை பொங்கல், கம்மஞ்சோறு, கேழ்வரகு களி போன்ற பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப இதர சிறுதானிய உணவு வகைகள் மற்றும் தின்பண்டங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பெரம்பலூர் உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் செண்பகம் தெரிவித்துள்ளார்.