திருநெல்வேலி
வியாபாரிகள் கருப்பு கொடி ஏற்றி 18-ந்தேதி போராட்டம்
|வியாபாரிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தெரிவித்தார்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி வியாபாரிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தெரிவித்தார்.
வியாபாரிகள் கூட்டம்
நெல்லை சந்திப்பு பகுதி வணிகர் சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நெல்லை சந்திப்பில் ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கினார். சுதாகர், சொக்கலிங்கம், ரவீந்திரன், முத்தப்பா, இளங்கோ, மோகன், ஆஞ்சிஸ், செல்வசேன், காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசினார். நெல்லை மாநகர் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் ஜெயச்சந்திரன் தீர்மானங்கள் வாசித்தார்.
கருப்பு கொடி
மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் கூறுகையில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி நெல்லை பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றப்படும். மேலும் வியாபாரிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அதன் பிறகும் பஸ்நிலையத்தை திறக்கவில்லை என்றால் கடையடைப்பு போராட்டம், மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடைபெறும், என்றார்.
கூட்டத்தில் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் மண்டல தலைவர் தச்சை சுப்பிரமணியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட துணைத்தலைவர்கள் ஸ்டீபன் பிரேம்குமார், அருள் இளங்கோ, முகம்மது அலி, மாணிக்கம், மாவட்ட செயலாளர் நயன்சிங், கூடுதல் செயலாளர் விநாயகம், துணைச்செயலாளர் மீரான், பொருளாளர் அசோகன், செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், கான்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நெல்லை ராஜா பில்டிங் வியாபாரிகள் சங்கத்தலைவர் எர்னஸ்ட் பர்னாந்து நன்றி கூறினார்.