< Back
மாநில செய்திகள்
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
மதுரை
மாநில செய்திகள்

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
7 Dec 2022 8:14 PM GMT

வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காய்கறி மார்க்கெட்

மதுரை மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் கொரோனா காலங்களில் சுமார் 36 மாத வாடகையை கட்டாயப்படுத்தி மதுரை மாநகராட்சி வசூல் செய்து வருவதாக தெரிகிறது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான கடை வியாபாரிகள், இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்தனர்.

ஒரு சில கடைகளும் திறக்கப்பட்டு விற்பனைக்கு வந்த காய்கறிகளை, பொதுமக்களுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்தனர். வியாபாரிகளின் இந்த போராட்டத்தால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்புவது பாதிக்கப்பட்டது.

வெறிச்சோடியது

எப்போதும் பரபரப்பாக காணப்படும், சென்ட்ரல் மார்க்கெட்டில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் பரவை மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கான வாடகையை உயர்த்தி இருக்கிறார்கள். மாநகராட்சியின் அத்துமீறல் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த கட்டமாக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்