திருப்பத்தூர்
வாகனம் மோதி வியாபாரி பலி
|நாட்டறம்பள்ளி அருகே வாகனம் மோதி வியாபாரி பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் மம்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 65). மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலை பச்சூர் பகுதியில் மாந்தோப்பில் மாங்காய் பறிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மேலூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில் அமானுல்லா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.