தேனி
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வியாபாரி பலி
|தேனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வியாபாரி பலியானார்.
தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டி ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 48). முந்திரி பருப்பு வியாபாரி. கடந்த 14-ந்தேதி இரவு, இவர், தனது நண்பரான தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த கண்ணன் (43) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேனி-மதுரை சாலையில் சென்றார். அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் ராஜா, கண்ணன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் ஆலப்பாடு பகுதியை சேர்ந்த அஜிமோன் சாக்கோ (23) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராஜாவின் மனைவி மீனா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.