சென்னை
நீலாங்கரையில் சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
|சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 24). காய்கறி கடை நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து வந்தார். நீலாங்கரை பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்துவந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலியான ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (65). இவர், நேற்று முன்தினம் இரவு பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி சென்ற கார் மோதியதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான மதுராந்தகம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.