< Back
மாநில செய்திகள்
திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை

தினத்தந்தி
|
11 April 2023 12:41 PM IST

திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் தேவராஜ் (வயது 55). வியாபாரி. நேற்று இவரது பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தனது மகனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (28) என்பவரும் கலந்துகொண்டார். இந்த நிலையில் தேவராஜ் சதீஷ்வுடன் சேர்ந்து இரவு மதுகுடிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து தேவராஜின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தேராஜ் அங்கேயே மயங்கி விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் தேவராஜ் வீட்டுக்கு வராததால் வீட்டார் அவரை தேடியபோது ரத்த வெள்ளத்தில் தேவராஜ் கிடந்தது தெரிய வந்தது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு தேவராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மதுபோதையில் தேவராஜை கல்லால் அடித்து கொன்ற சதீஷ்சை போலீசார் கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க கோரி இறந்த தேவராஜின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திருப்போரூர் ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்