< Back
மாநில செய்திகள்
பள்ளிப்பட்டு அருகே டிராக்டர்-கார் மோதல்; டிரைவர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே டிராக்டர்-கார் மோதல்; டிரைவர் பலி

தினத்தந்தி
|
15 July 2023 1:08 PM IST

பள்ளிப்பட்டு அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த டிராக்டர் கார் மீது மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் உமாபதி (வயது 38). லாரி டிரைவராக இருந்து வருகிறார்.

மேலும் இவருக்கு சொந்தமாக காரை வாடகைக்கு ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது காரில் அருகே கிராமத்தில் உள்ள தனது தாய்மாமன் வீட்டிற்கு சித்தூர்- புத்தூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலா சமுத்திரம் பால் டைரி அருகே சித்தூரில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த உமாபதி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். விபத்தில் மாங்காய் ஏற்றி வந்த டிராக்டர் நிலைத்தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. தகவல் கிடைத்ததும் எஸ்.ஆர்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த உமாபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த உமாபதிக்கு கோவிந்தம்மாள் (30) என்ற மனைவியும், ஜோசப் (16) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்