நாமக்கல்
வெண்ணந்தூரில் செல்போன் டவரில் நின்று மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
|வெண்ணந்தூரில் செல்போன் டவரில் நின்று மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் பனங்காடு பகுதியை சேர்ந்த செங்கோடன் மகன் கணேசன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டுவதற்கு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்துக்கு அருகில் கடந்த சில ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணேசன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனக்கென இடம் பிடித்து வைத்துள்ள இடத்தில் வீடு கட்டுவதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்தாராம். அப்போது பேரூராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வேலி அமைக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த கணேசன் திடீரென அருகில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறினார். பின்னர் டவரில் நின்றவாறு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் தொழிலாளி கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பின்னர் கணேசன் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் பேசி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.