< Back
மாநில செய்திகள்
பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
18 Jan 2023 2:23 PM IST

காணும் பொங்கலையொட்டி பழவேற்காடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரி இந்தியாவின் 2-வது மிகப் பெரிய உவர்ப்புநீர் ஏரியாக விளங்குகிறது. இந்த ஏரியில் 160 வகையான மீன்கள், இறால்கள், 25 வகை மிதவை புழுக்கள் உயிர் வாழ்கின்றன. இங்கு இயற்கையாகவே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. எனவே இந்த ஏரி சுற்றுலா பயனிகளை கவர்ந்த இடமாக விளங்குகிறது. எனவே விடுமுறை, பண்டிகை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் டச்சுக்காரர்கள் தலைமையிடமாக இருந்த பழவேற்காட்டில் அவர்கள் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க ஜெல்லிடீயா கோட்டை உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று காணும் பொங்கலையோட்டி பழவேற்காடு பகுதிக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

சுற்றுலா தளமான பழவேற்காடு பகுதியில் உயரமான கலங்கரை விளக்கம் மற்றும் சுகாதாரமான நீண்ட அழகிய கடற்கரை இயற்கையாக அமைந்துள்ளது. இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இந்த பகுதிக்கு இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் காணும் பொங்கல் தினத்தில் வழக்கத்தை விட அதிகமாக ஆயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரை இயற்கை அழகை கண்டு கழித்தனர். இதனால் அசம்பாவிதங்களை தடுக்க பழவேற்காடு கடற்கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்