சேலம்
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|மேட்டூர் அணை பூங்காவில் நேற்று விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரேநாளில் 14 ஆயிரத்து 522 பேர் பூங்காவிற்கு வந்துள்ளனர்.
மேட்டூர்:-
மேட்டூர் அணை பூங்காவில் நேற்று விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரேநாளில் 14 ஆயிரத்து 522 பேர் பூங்காவிற்கு வந்துள்ளனர்.
மேட்டூர் அணை
கர்நாடகத்தில் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக கடந்த மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அன்று முதல் நேற்று வரை அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வருகிறது. அணைக்கு வரும் வரத்து நீரானது உபரிநீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கடந்த வாரத்தில் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் 16 கண் மதகுகள் மற்றும் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு குறையாமல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆரவாரத்துடன் வெளியேறுகிறது. 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுவதையும், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதையும் காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூர் வந்த வண்ணமே உள்ளனர்.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 14 ஆயிரத்து 522 பேர் வந்து பூங்காவை கண்டு ரசித்து சென்றுள்ளனர்.
இதேபோன்று அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்துக்கு 383 பேர் வந்து, அணையின் முழுமையான தோற்றத்தையும் பவள விழாகோபுரத்தின் அழகையும் ரசித்து உள்ளனர். இந்த சுற்றுலா பயணிகளின் வருகையால் நுழைவு கட்டணமாக நேற்று ஒரேநாளில் ரூ.87 ஆயிரத்து 125 வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.