வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல்,
'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இன்று வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் சாரல் மழையுடன் குளுமையான சூழல் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தவாறு, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும், படகு சவாரி செய்தும், பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை கண்டு ரசித்தும் விடுமுறையை கொண்டாடினர்.