செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை
|மாமல்லபுரத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களை கண்டு களிக்க நாள்தாறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அங்குள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் பகுதி போன்ற இடங்களில் போதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா வரும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்படுவதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.
கோரிக்கை
கடற்கரை கோவில் அருகில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த 15 ஏக்கர் காலி நிலத்தில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் போதுமான வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கு சாலையில் நிறுத்தப்படும் அவலம் தொடருகிறது. அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போதுமான வாகன நிறுத்துமிட வசதி இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் வந்த உடனேயே கிளம்பி விடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கடை நடத்துவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே உரிய வாகன நிறுத்தும் இடத்தை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்தி வர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.