செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்: போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தப்படும் அவலம்
|மாமல்லபுரத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லாதததால் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படும் அவலம் தொடருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்குள்ள புகழ்பெற்ற கடற்கரை கோவில். வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்ப்பதற்காக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக அளவில் வெளிநட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் விடுமுறை நாட்களில் கார்களில் வருகிற சுற்றுலா பயணிகள் நெரிசலுக்கு உள்ளாகி அவதிக்குள்ளாகிறார்கள்.
சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடைய கார்களை நிறுத்த போதுமான இடம் இல்லாததால் சாலையோரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் தங்கள் கார்களை நிறுத்தி அவசர, அவசரமாக புராதன சின்னங்களை பார்ததுவிட்டு செல்லும் நிலை உள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு செல்லும் வழியில் ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் புது நகர் வளர்ச்சி குழுமத்திடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு பகுதி தொல்லியல் துறை பராமரிப்புக்கு மட்டும் கொடுக்கப்பட்டு அவர்கள் கம்பி வேலியிட்டு புல்வெளி வளர்த்து வருகிறார்கள். அந்த இடத்தை எந்த காரணத்தை கொண்டும் மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்து மத்திய தொல்லியல் துறைக்கு முழுமையாக ஒப்படைக்க கூடாது. அந்த இடத்தில் ஒரு ஏக்கர் அளவுக்கு தான் தற்போது வாகன நிறுத்துமிட வசதி உள்ளது. இந்த இடத்தில் 50 வாகனங்கள் மட்டும் தான் நிறுத்தும் நிலை உள்ளது. அதிக அளவில் கார், பஸ் வரும்போது கடற்கரைக்கு வாகனங்களுடன் வருகிற பயணிகள் சில நேரங்களில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த இடத்திற்கு வடக்கு பக்கத்தில் 2½ ஏக்கர் இடம் உள்ளது. இது தமிழக அரசுக்கு சொந்தமான இடம் ஆகும். தற்போது உள்ள இட வசதியை விரிவாக்கம் செய்து வடக்கு பக்கம் உள்ள இந்த இடத்தில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்பாடு செய்தால் 50-க்கும் மேற்பட்ட கார்கள், பஸ்கள், வேன்கள் நிறுத்த இயலும். அதேபோல் கடற்கரை சாலையை போன்று ஐந்துரதம் பகுதியிலும் வாகன நிறுத்துமிடம் அவசியமாகிறது. அங்கு தற்போது உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 50 வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கான இடவசதி உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் வந்தால் அங்கும் சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தும் அவல நிலை உள்ளது.
விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் வரும் வாகனங்கள் அதனை நிறுத்த இடம் இல்லாததால் மணிக்கணக்கில் சாலைகளில் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. அப்போது வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்லும்போது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
குறுகலான ஐந்துரதம் பகுதியில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்த அரசு நிலம் இல்லை. 75 ஏக்கர் தனியார் நிலங்கள் உள்ளன. தற்போது இந்த இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடத்தில் எந்தவித கட்டுமானமும் செய்ய இயலாத நிலையில் தொல்லியல் துறையின் தடைசட்டம் உள்ளது. அதனால் இந்த நிலத்தை அதன் உரிமையாளார்கள் எந்த வளர்ச்சியும் செய்யாமல் காலியாக வைத்துள்ளனர். இந்த இடத்தை குத்தகை அடிப்படையில் அரசு ஆர்ஜிதம் செய்து சட்டத்திற்கு உட்பட்டு 10 ஏக்கர் நிலத்தில் வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தலாம் என்று, பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசை அறிவுறுத்தி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து மாமல்லபுரம் வரும் தொழிலாளர் நலத்துறை சார்பில் உள்ள தங்கும் விடுதி அருகில் உள்ள இடங்களையும் வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்றும் பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகிறனர். தற்போது நாளுக்கு நாள் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரம் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. குறிப்பாக மாமல்லபுரம் பேரூராட்சி நுழைவு கட்டணம் செலுத்தியும், ரூ.40 பார்வையாளர் கட்டணம் செலுத்தியும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வரும் சுற்றுலா பயணிகள் வாகன நிறுத்தும் இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே மாமல்லபுரத்தி்ல் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வாகன நிறுத்தும் இடம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.