கன்னியாகுமரி
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
|திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தற்போது மழை அளவு குறைவாக இருந்தாலும் கோதையாற்றில் தண்ணீர் வருவதால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்தனர். அவர்கள் அருவியிலும், சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். அருவியின் எதிர்புறம் பச்சைப்பசேல் என காட்சி தரும் அழகிய புல்வெளி பூங்கா மற்றும் அலங்கார நீரூற்றை பார்த்து ரசித்தனர்.
படகு சவாரி
தொடர்ந்து அருவியின் ேமல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர். அத்துடன் திற்பரப்பு மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களின் வந்ததால் திற்பரப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் திற்பரப்பு, மாத்தூர் பகுதிகள் 'களை' கட்டியது.