செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
|மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளின் வருகை குறையவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் குறையாமல் அனல் காற்று வீசுவதால் இதமான கடல் காற்று, ரம்மியமான சூழலை அனுபவிப்பதற்காக மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பலர் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது. கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான போலீசார் சாதாரண உடையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் நேற்று மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.