ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்..!
|வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது.
நாகை,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமை கொண்டது. பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவுக்கு ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருவர்.
அந்த வகையில் 2024 ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்துக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர். நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் உள்ளூர் பக்தர்களும் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. வேளாங்கண்ணி பேராலயம், மாதாகுளம், நடுத்திட்டு, பழைய வேளாங்கண்ணி, கடற்கரை சாலை, வேளாங்கண்ணி கடற்கரை என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக காணப்படுகின்றனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதால் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.