கன்னியாகுமரி
ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
|ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று விடுமுறை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
தக்கலை,
ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று விடுமுறை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பத்மநாபபுரம் அரண்மனை
தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் அரண்மனை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் சிற்ப வேலைபாடுகள் கொண்ட தூண்கள், மூலிகைகளால் செய்யப்பட்ட மரக்கட்டில் போன்றவை உள்ளன.
கேரள அரசின் பராமரிப்பில் உள்ள இந்த அரண்மனையை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் அங்கு உள்ள ஓவியங்களையும், கட்டிட கலையையும், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றையும் பார்த்து, ரசித்து விட்டு செல்வது வழக்கம்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்தநிலையில் ஓணம் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கேரள மாநிலத்தின் எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டத்திலும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓணம் பண்டிகையையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால் குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே சமயம் பத்மநாபபுரம் அரண்மனையை காண சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து குவிந்தனர்.
ஆனால் ஓணம் பண்டிகை என்பதால் அரண்மனைக்கு நேற்று விடுமுறை நாள் ஆகும். இதனால் அரண்மனை பூட்டி கிடந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் பூட்டியிருந்த வாசல் முன்பு நின்று போட்டோ எடுத்து விட்டு திரும்பி சென்றனர்.