< Back
மாநில செய்திகள்
வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
23 Jun 2024 9:32 PM IST

ஊட்டி தொட்டபெட்டாவிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரள போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம், உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் புலி நடமாட்டம் காரணமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த பைன்பாரெஸ்ட் பகுதிக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

அதைபோல ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தொட்டபெட்டா மலை சிகரம் சென்ற சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மலைகள், பள்ளத்தாக்குகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக மலைச் சிகரத்தில் இருந்து தெரியும் ஊட்டி நகர வனப்பகுதிகள், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் மலைகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

முதன்முறையாக தொட்டபெட்டா மலை சிகரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உயரமான மலை மீது நின்று பள்ளத்தாக்குகளையும், நகர்புறங்களையும் காண்பது ரம்மியமாக உள்ளதெனவும், தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் மழை மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் இந்த காலநிலையை ரசிப்பதாக தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகளின் அதிகமான வருகையால் தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்