செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|இன்னும் 2 வாரங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று கோடை விடுமுறையின் ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும் சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து இருந்ததை காண முடிந்தது. கடற்கரை கோவில் ஐந்தரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. அங்குள்ள பாறை சிற்பங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததை காண முடிந்தது.
ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது. மாமல்லபுரம் நகர பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் சாலவான்குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை புராதன சின்னத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.