< Back
மாநில செய்திகள்
புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
31 Dec 2023 4:30 AM IST

பொதுவாக பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டு பிறப்பை சுற்றுலா தலங்களில் கொண்டாட விரும்புவார்கள்.

கொடைக்கானல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த ஒருவாரமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையே நாளை (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டு பிறப்பை சுற்றுலா தலங்களில் கொண்டாட விரும்புவார்கள். இதையொட்டி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பலரும் 2 நாட்களுக்கு முன்பாகவே கொடைக்கானலுக்கு படையெடுத்து வந்தனர். அவர்கள் கொடைக்கானல் நகர் மற்றும் மலைக்கிராமங்களில் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் மின்னொளி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானலில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவுகிறது. அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி இதமான சூழல் ஏற்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா இடங்களும் நேற்று சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன. புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்