< Back
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
25 Sept 2022 2:49 PM IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயற்கை சூழலுடன் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இந்த பூங்காவில் 2,300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே ஒரு டீனா என்ற 18 வயதுடைய பெண் வரி குதிரையை பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியோர்கள் அனைவரும் நீண்ட நேரம் அதனுடைய இருப்பிடத்தில் நின்று ரசித்து பார்த்து சென்றனர். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்த தீனா என்ற இந்த பெண் வரிகுதிரை உடல்நிலை குறைவு காரணமாக கடந்த மே மாதம் 22-ந் தேதி உயிரிழந்தது. இதனால் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வரிக்குதிரை இருப்பிடத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது:-

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த ஒரே ஒரு பெண் வரிக்குதிரை உயிரிழந்து விட்டதால், தற்போது பூங்காவில் வரிக்குதிரை இல்லாமல் அதனுடைய இருப்பிடம் காலியாக உள்ளது. இதனால் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் மூலம் விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் வரிக்குதிரை அதிகமாக பராமரித்து வரும் வெளிமாநில உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரிக்குதிரையை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்