தென்காசி
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் குறைவாக விழும் தண்ணீரில் காத்திருந்து குளித்து செல்கிறார்கள்.
தென்காசி:
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் குறைவாக விழும் தண்ணீரில் காத்திருந்து குளித்து செல்கிறார்கள்.
சாரல் மழையால் தண்ணீர்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும். சில ஆண்டுகளில் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டு கடந்த மாதம் 15-ந் தேதி குற்றாலம் பகுதியில் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. சுமார் 10 நாட்கள் அருவிகளில் தண்ணீர் மிகவும் நன்றாக விழுந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஆனால் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அருவிகளில் படிப்படியாக தண்ணீர் குறைந்து தற்போது மிகவும் குறைவான அளவில் விழுகிறது.
நேற்று குற்றாலம் அருவிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டுமே தண்ணீர் விழுகிறது. எனவே பெண்களும் இதே பகுதியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் போலீசார் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வரிசையில் நிறுத்தி 10 பேராக குளிக்க அனுமதித்தனர். ஐந்தருவியில் மூன்று கிளைகளில் மட்டும் தண்ணீர் விழுகிறது. அங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஏமாற்றம்
எனினும் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். குற்றால சீசன் காலமும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை பெய்தால் தான் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் எந்த நேரத்திலும் குற்றாலத்தில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.