< Back
மாநில செய்திகள்
உச்சிப்புளி அரியமான் கடலில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

உச்சிப்புளி அரியமான் கடலில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி

தினத்தந்தி
|
19 May 2023 12:15 AM IST

கோடைகால விடுமுறையை தொடர்ந்து உச்சிப்புளி அரியமான் கடலில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பனைக்குளம்,

கோடைகால விடுமுறையை தொடர்ந்து உச்சிப்புளி அரியமான் கடலில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அரியமான் கடற்கரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகே உள்ளது அரியமான் கடற்கரை. அதுபோல் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த அரியமான் கடற்கரை. எண்ணிலடங்கா மிக உயரமான சவுக்கு மரங்களை கொண்டும் அதிக மணல் பரப்பை கொண்டும் அழகாக காணப்படுவது தான் இந்த அரியமான் கடற்கரை.

ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் இந்த அரியமான் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். அதுபோல் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் வனத்துறை மூலம் புதிதாக சுற்றுலா படகு சவாரியானது தொடங்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. இதேபோல் உச்சிப்புளி அரியமான் கடற்கரையிலும் கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியில் அமர்ந்தபடி கடல் அழகையும் மற்றும் சவுக்கு மரங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் கடலில் இறங்கியும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் குளித்தபடி ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர்.

படகுசவாரி

மேலும் அரியமான் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வரும் பைபர் படகில் மிகுந்த ஆர்வத்துடன் கடலுக்குள் படகு சவாரி செய்து கடல் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். 12 பேருடன் புறப்படும் இந்த படகில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கடற்கரையில் இறக்கி விடப்படுகின்றனர். நபர் ஒருவருக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகின்றது. குழந்தைகளுக்கு ரூ.80 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்து கடல் சீற்றமாக இல்லாமல் இயல்பு நிலையில் இருந்து வருவதால் அதியமான் கடல் பகுதியில் வனத்துறை மூலம் வழக்கம்போல் சுற்றுலா படகுசவாரி நடைபெற்று வருகின்றது. ஆனால் அதே நேரம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியில் வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்