தென்காசி
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
|நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் அருவியை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் இரவில் மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்கும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவிகளுக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே, வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதன் காரணமாக அந்த அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். இருந்தபோதும், நேற்று குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். குற்றாலத்தில் நேற்று வெயில் அடித்தது. சாரல் மழை பெய்யவில்லை. காற்று வேகமாக வீசியது.