தென்காசி
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்; விரைவில் சீசன் தொடங்க வாய்ப்பு
|குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.
தென்காசி:
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.
குற்றாலம் அருவி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்கு குளிர்ந்த காற்று வீசும். சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும்.
இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ லட்சக்கணக்கானோர் குற்றாலம் வருவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் பெய்த சாரல் மழையால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டியது. இதன் பிறகு மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.
சீசன் தொடங்க வாய்ப்பு
கடந்த 2 நாட்களாக குற்றாலம் பகுதியில் குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது. நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் லேசான சாரல் மழை தூறியது. ஐந்தருவியில் மூன்று கிளைகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்தனர்.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் குற்றாலத்தில் சாரல் மழையும் தொடங்கிவிடும். தற்போதைய சூழல் நீடித்தால் விரைவில் குற்றாலத்தில் சீசன் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.