< Back
மாநில செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி: அரசு முழு வீச்சில் செயல்பட்டதாக மாவட்ட கலெக்டர் தகவல்
மாநில செய்திகள்

ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி: அரசு முழு வீச்சில் செயல்பட்டதாக மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
1 Oct 2023 3:33 AM IST

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலியாகினர் என்றும் அரசு முழு வீச்சில் செயல்பட்டதாகவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

ஊட்டி,

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர்.

மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது.

மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

மீட்பு பணி

இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்பு பணியை துரிதப்படுத்தினர். சாலையில் இருந்து கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு துறையினர் பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

8 பேர் பலி

அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.நிதின்(வயது 15)

2.தேவிகா(36)

3.முருகேசன் (65)

4.முப்பிடாதி அம்மாள்(67)

5. கவுசல்யா(25)

6. இளங்கோ(67)

7. ஜெயா(50)

8. தங்கம்(40)

இவர்கள் தவிர 53 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கோத்தகிரி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, விபத்தில் சிக்கியவர்கள் தென்காசியில் இருந்து கடந்த 28-ந் தேதி கேரள மாநிலம் குருவாயூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்டு உள்ளனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு ஊட்டிக்கு வந்து இருக்கின்றனர். இங்கிருந்து கோவை மருதமலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்தில் சிக்கியுள்ளது என்றனர்.

இந்நிலையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலியாகி உள்ளனர் என்றும் அரசு முழு வீச்சில் செயல்பட்டதாகவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பேருந்தில் 60 பேர் பயணம் செய்தனர்... மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டனர்... 8 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... அரசு முழு வீச்சில் செயல்பட்டது... முதல்-அமைச்சர் நிவாரண நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளார்... அதனால், தற்போது ஒட்டுமொத்த குழுவும், அரசு இயந்திரமும் தயார் நிலையில் உள்ளது.." என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்