< Back
மாநில செய்திகள்
குன்னூர் மலைப்பாதையில்  சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு
மாநில செய்திகள்

குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Sept 2023 10:15 PM IST

குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது.

நீலகிரி,

தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்த நிலையில், பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருமதி முப்புடாதி (வயது 67), திரு.முருகேசன் (வயது 65), திரு இளங்கோ (வயது 64), திருமதி தேவிகலா (வயது 42), திருமதி கவுசல்யா (வயது 29) மற்றும் செல்வன் நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி 1077 , 0423 2450034 மற்றும் 94437 63207 என்ற உதவி எண்களில் விபத்து குறித்த தகவல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்