< Back
மாநில செய்திகள்
வத்தல்மலையில்  சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

வத்தல்மலையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
7 Nov 2022 12:15 AM IST

வத்தல்மலையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வத்தல்மலையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வத்தல்மலை

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையானது கடல் மட்டத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் இயற்கை எழில்கொஞ்சும் வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, கருங்கல்லூர், சின்னாங்காடு, ஒன்றிக்காடு, நாயக்கனூர், திருவளப்பாடி, மன்னாங்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. காப்பி, மிளகு, ஆரஞ்சு, கமலா, பலா, ராகி, சாமை உள்ளிட்டவை இங்கு பயிரிடப்படுகிறது.

தர்மபுரியில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வத்தல்மலைக்கு கொமத்தம்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் செல்ல வேண்டும். மொத்தம் 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் பசுமைகள் நிறைந்த வத்தல்மலையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

90 ஏக்கர் நிலம்

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு வத்தல்மலை சுற்றுலா தலமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தோட்டக்கலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வத்தல்மலையில் ரூ.10 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பார்வை கோபுரம், ரிங் ரோடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக தலைமை செயலாளர், தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தாவரவியல் பூங்கா அமையும் இடத்தில் பெயர் பலகையும் வைத்து விட்டு சென்றனர்.

பஸ் வசதி

இந்த நிலையில் அப்பகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வத்தல்மலைக்கு ரூ.10 கோடியில் புதிய தார்சாலையும் அமைக்கப்பட்டது. இதனிடையே கடத்த சில மாதங்களுக்கு முன்பு வத்தல்மலைக்கு தர்மபுரியில் இருந்து பஸ் வசதி செய்து தரப்பட்டது. ஆனால் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தாவரவியல் பூங்கா அமையும் இடத்தில் வைத்திருந்த பெயர் பலகையும் காணாமல் போய்விட்டது.

வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வத்தல்மலைக்கு சென்று இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். தற்போது தனியார் சிலர் தங்கும் விடுதிகளை கட்டி உள்ளனர். ஆனால் அரசு தரப்பில் எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு சட்டசபையில் வத்தல்மலையில் புதியதாக 10 ஏக்கர் நிலப்பரப்பில் சாகச பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான எந்த முன்னேற்பாடு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான வத்தல்மலையை சுற்றுலா தலமாக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பொறுப்பு அமைச்சர்

தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமி:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை சுற்றுலாத்தலமாக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அருகில் உள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் உள்ள வத்தல்மலைக்கு நிச்சயம் வருவார்கள்.

எனவே தமிழக அரசு சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள வேளாண்மை துறை அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இதேபோல் கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவித்த சாகச பூங்கா அமைக்கும் பணியையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தங்கும் விடுதிகள்

வத்தல்மலையை சேர்ந்த விவசாயி சீராளன்:-

வத்தல்மலை கிராம மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியில் இருந்து பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது. பகல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கி இந்த சேவையை மேலும் நீட்டிக்க வேண்டும். பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வத்தல்மலையில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.

சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தங்கும் விடுதிகளை கட்ட வேண்டும். குறிப்பாக பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் வத்தல்மலையில் விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்