கிருஷ்ணகிரி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா
|கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு சுற்றுலா பயணம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ, மாணவிகள் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
சிறப்பு கட்டுரை
சுற்றுலாத்துறை சார்பில் 2 பஸ்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிடும் சுற்றுலா இடங்களை சிறு குறிப்பு எடுத்து, சுற்றுலா குறித்து சிறப்பு கட்டுரையாக எழுத வேண்டும். சிறந்தமுறையில் கட்டுரை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திர குமார், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.