< Back
மாநில செய்திகள்
பெற்ற குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை; காதலனுடன் தாய் கைது
சென்னை
மாநில செய்திகள்

பெற்ற குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை; காதலனுடன் தாய் கைது

தினத்தந்தி
|
3 Oct 2022 11:56 AM IST

சென்னையில் பெற்ற குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கணவரை பிரிந்த பெண்

சென்னை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பானு (வயது 29). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்தார். 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் பானு, அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஷ் (37) என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். அவரோடு மனைவிபோல சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுடைய காதல் சல்லாப, உல்லாச வாழ்க்கைக்கு பெண் குழந்தை இடையூறாக இருந்தது.

இவர்கள் ஒன்றாக இருக்கும்போது குழந்தை அழும். இதனால் எரிச்சல் அடைந்து குழந்தையை பானு அடித்து துன்புறுத்தினார்.அவரது காதலன் ஜெகன் ஜோசும், குழந்தையை சிகரெட் தீயால் முகத்தில் சுட்டு கொடுமைப்படுத்தினார். இவர்கள் சித்ரவதை தாங்காமல் கடந்த 29-ந் தேதி குழந்தை மயங்கிவிட்டது. குழந்தையின் மேல் தண்ணீர் தெளித்ததால், மயக்கத்தில் இருந்து மீண்டது. பின்னர் அந்த குழந்தையை பானு, எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

தாயார் புகார்

இதற்கிடையில், பானுவின் தாயார் கன்னியம்மாள் செங்கல்பட்டில் இருந்து சென்னை வந்தார். குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முகத்தில் சிகரெட் சூடு, முதுகில் அடிபட்ட காயம் ஆகியவற்றை பார்த்து கன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அடையாறு பெண்கள் போலீசில் கன்னியம்மாள் புகார் கொடுத்தார். புகாரில் குழந்தை சித்ரவதை செய்யப்பட்டதை விவரித்திருந்தார்.

இதையொட்டி அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானு, அவரது காதலன் ஜெகன் ஜோஷ் இருவரையும் கைது செய்தனர். குழந்தை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. காதலனோடு சேர்ந்து பெற்ற குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அடையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்