தஞ்சாவூர்
அய்யம்பேட்டை, பட்டுக்கோட்டை பகுதிகளில் சாரல் மழை
|அய்யம்பேட்டை, பட்டுக்கோட்டை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அய்யம்பேட்டை:
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். நேற்று அதிகாலை முதல் அய்யம்பேட்டை, பசுபதி கோவில், சக்கராபள்ளி, வழுத்தூர், மணலூர், பட்டுக்குடி, பெருமாள் கோவில், உள்ளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல இந்த சாரல் மழை முன் பட்ட குறுவை நெல் பயிருக்கும், வளர்ச்சி பருவத்திலுள்ள கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதிகளில் நடைபெற்று வரும் செங்கல் சூளைப் பணிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதேபோல் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.