< Back
மாநில செய்திகள்
சூறைக்காற்றுடன் பலத்த மழை: அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது - அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்
சென்னை
மாநில செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த மழை: அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது - அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
14 July 2022 8:52 AM IST

சூறைக்காற்றுடன் பலத்த மழை காரணமாக அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 184 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அந்தமானை நெருங்கியபோது அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோசமான வானிலை நிலவியது.

இதனால் விமானம் அந்தமானில் தரை இறங்க முடியாமல் நீண்டநேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்தது. ஆனாலும் வானிலை சீரடையாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. பயணிகள் சிறிதுநேரம் விமானத்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். அதன்பிறகும் அந்தமானில் வானிலை சீரடையவில்லை. இதையடுத்து அந்தமானில் தரைக்காற்று அதிகமாக இருப்பதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அந்தமானில் மோசமான வானிலை காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதியே விமானம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்