சென்னை
கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
|திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருவேற்காடு,
கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் கூவம் நதி, திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதி வரை நல்ல தண்ணீராக வரும். அற்கு பிறகுதான் கழிவுநீர் கலந்து கழிவுராக மாறி செல்லும்.
இந்தநிலையில் திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் நேற்று காலை கூவம் ஆற்றில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் தலைமையில் விரைந்து வந்த அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் மட்டும் சுமார் 4 டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கொண்டதாக இருந்தது.
செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கூவம் ஆற்றில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை விட்டு செல்வதாகவும், தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தண்ணீர் கூவத்தில் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுபற்றி திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் செத்திருக்கலாம். நச்சு கலந்த நீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மீன்கள் செத்ததற்கான காரணம் குறித்து அறிய இறந்து போன மீன்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.
கூவத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.