< Back
மாநில செய்திகள்
தக்காளி ரூ.120-க்கு விற்பனை
திருப்பூர்
மாநில செய்திகள்

தக்காளி ரூ.120-க்கு விற்பனை

தினத்தந்தி
|
2 July 2023 10:01 PM IST

தாராபுரம் பகுதியில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வு

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கொளிஞ்சிவாடி, கொளத்துப்பாளையம், தாளக்கரை அலங்கியம், தொப்பம்பட்டி கோவிந்தாபுரம், நாரணபுரம் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கிணறுகளில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் தக்காளி சாகுடிப குறைந்து வரத்து குறைந்து போனது. கடந்த வாரம் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.750 விற்பனையான போது கிலோ ஒன்று ரூ.50-க்கு விற்பனையானது. கடந்த வாரம் முதல் தாராபுரம் உழவர் சந்தையில் தினசரி தக்காளி வரத்து குறைந்து போனது. இதனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ரூ.50 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று உழவர் சந்தையில் ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது.

கிலோ ரூ.120-க்கு விற்பனை

இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:- தக்காளி அன்றாட உணவு தேவைக்கு உபயோகப்படும் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வந்தனர். இவை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.50 முதல் ரூ.70 வரை மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் விற்பனையானதால் போட்டி போட்டு வாங்கினோம். தற்போது தக்காளி வரத்து குறைவால் ரூ.120 விற்பதால் விலை கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

குளிர்சாதன கிடங்கு வசதி

விவசாயி ஒருவர் தக்காளி உற்பத்தி குறித்து கூறியதாவது:-

தங்கள் விளைநிலங்களில் விளைவித்த தக்காளியை பறிக்க கூலி கூட கிடைக்காத சூழ்நிலையில் அதனை பறிக்காமல் செடியில் விட்டுவிட்டு வந்தோம். தாராபுரம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி அதிகமாக விற்பனையாவது இல்லை.

விற்பனை குறையும் போது அதனை பாதுகாக்க இருப்பு வைக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் நலன் கருதி தாராபுரம் நகராட்சி பகுதியில் தக்காளிகளை இருப்பு வைக்க போதிய குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்