திருப்பூர்
கூவிக்கூவி பார்த்தும் தக்காளி கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லையே?
|அன்று கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாத்த நிலையில் கூவிக்கூவி பார்த்தும் தக்காளி கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லையே? என்று விவசாயிகள் தலையில் துண்டை போட்டு சோகமானார்கள்.
அன்று கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாத்த நிலையில் கூவிக்கூவி பார்த்தும் தக்காளி கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லையே? என்று விவசாயிகள் தலையில் துண்டை போட்டு சோகமானார்கள்.
தக்காளி
பொதுவாக வாழைதான் விவசாயியை வாழ வைக்கும், தாழவும் வைக்கும் என்பார்கள். ஆனால் தற்போது அந்த இடத்தை தக்காளி, வெங்காயம் பிடித்துக்கொண்டது. விலை கிடைக்கும், வீழ்ந்தே கிடக்க வேண்டியதில்லை. வீறு கொண்டு எழலாம் என்றுதான் விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் அப்படியா இருக்கிறது... சமையல் அறை ராணி என்று அழைக்கப்படும் தக்காளி விவசாயிகளை படுத்தும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
விலை உயர்ந்தால் இல்லத்தரசிகள் கண்ணீர் வடிப்பதும், விலை குறைந்தால் விவசாயிகள் கண்கலங்குவதும் வாடிக்கையாகி போனது.
அசைவம், சைவம் என அனைத்து வகை சமையலிலும் இடம்பிடித்தது தக்காளி. செக்க சிவந்த தக்காளி சேராமல் எந்த சமையலும் ருசிப்பதில்லை. இதனால் குளிர்சாதன பெட்டியில் தக்காளி குறையாமல் இருக்குமாறு பெண்கள் பார்த்து கொள்வார்கள். இத்தகைய தக்காளியின் பெயரை கேட்டாலே பெண்கள் அச்சப்படும் நிலை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்டது.பருவமழை பொய்த்து போனதால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்தது. இதனால் அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது.
விலை குறைந்தது
குறிப்பாக தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதில் ஒரு கிலோ இஞ்சி ரூ.400-க்கும், பூண்டு கிலோ ரூ.250-க்கும் விற்பனையானது. தக்காளி கிலோ ரூ.180-க்கு வரை விற்கப்பட்டது. தக்காளி விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த பலர் சமையலில் தக்காளி சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தினர். ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக சமையலில் புளியை சேர்க்க தொடங்கினர். இது ஒரு புறம் இருக்க தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் தக்காளி தோட்டங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தனர்.
கடந்த ஜூன் மாதம் உயர தொடங்கிய தக்காளி விலை ஜூலை மாதத்தின் இறுதி வரை ரூ.120-க்கு விற்றது. இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. மேலும் தக்காளி விலை உயர்வால் தமிழக விவசாயிகளும் தக்காளி சாகுபடியில் இறங்கினர். இதையடுத்து தக்காளி வரத்து அதிகரித்து விலை சரியத்தொடங்கியது. இதன்படி பல்லடத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி ரூ.50-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. மேலும் சரக்கு வாகனங்களிலும் தெருத்தெருவாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சரிந்ததால் ஒருசில விவசாயிகள் தோட்டங்களில் தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.
கூவிக்கூவி விற்பனை
இதற்கிடையே நேற்று பல்லடம் உழவர் சந்தையில் விவசாயிகள் தக்காளிகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். கிலோ ரூபாய் பத்து, பத்து, என கூவி, கூவி பார்த்தும் தக்காளி விற்பனையாகாததால், வேதனையுடன் தக்காளிகளை திருப்பி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி கூறும்போது ". பல்லடம் உழவர் சந்தைக்கு தக்காளி கொண்டு வந்த விவசாயிகள் கிலோ ரூபாய் பத்து, பத்து, என கூவி, கூவி பார்த்தும் தக்காளி விற்பனையாகவில்லை. தக்காளி விலை உயர்ந்தவுடன் கூச்சல் போட்டவர்கள் இன்று தக்காளிக்கு விலை இல்லாமல் இருக்கும்போது தீர்வு சொல்ல வருவார்களா? என்றார்.