திருப்பூர்
சின்ன வெங்காயம், தக்காளியின் விலை கிலோ ரூ.50-ஆக குறைந்தது
|திருப்பூரில் சின்ன வெங்காயம், தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.50-ஆக குறைந்துள்ளது. இவை ஆட்டோக்களில் கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூரில் சின்ன வெங்காயம், தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.50-ஆக குறைந்துள்ளது. இவை ஆட்டோக்களில் கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மலிவு விலை
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தக்காளி, சின்ன வெங்காயத்தின் பெயரை கேட்டாலே மக்கள் அதிர்ச்சியடையக்கூடிய அளவிற்கு தமிழகம் முழுவதும் அதன் விலை இருந்தது. ஒரு கட்டத்தில் இவை விலையில் இரட்டை சதம் அடிக்ககூடிய அளவிற்கு சென்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
திருப்பூரிலும் இவற்றின் விலை இறங்குமுகமாக உள்ளது. குறிப்பாக ஆட்டோக்களில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை மலிவு விலையில் கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஓரளவு தரமுள்ள சின்ன வெங்காயம் 2 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சற்று தரம் குறைவாகவும், அளவில் சிறியதாகவும் உள்ள வெங்காயம் 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் மகிழ்ச்சி
இதேபோல் ஆட்டோக்களில் ஓரளவு தரமான தக்காளி 2 கிலோ 100 ரூபாய்க்கும், தரம் குறைந்தவை 3 கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 9 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி மொத்த விற்பனை விலையாக ரூ.550 முதல் ரூ.750 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையாக ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டோக்களில் மலிவு விலையில் தக்காளி, சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.